தேர்தல் சட்டம் திருத்தப்பட வேண்டும்: வலியுறுத்தும் தேர்தல்கள் ஆணைக்குழு!
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு முன்பாக தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பின் போது, அந்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதனை வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
இந்த நிலையில், தேர்தலை நடத்துவதற்கான முழு அதிகாரமும் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னெடுப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தினேஷ் குணவர்தனவுக்கிடையில் இன்று (17) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களுக்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாதென இதன் போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் சட்டங்கள்
அத்துடன், தேர்தல் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பின்னர் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களும் நடத்தப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
