ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ஊழியர் சேமலாப நிதியத்தின் வைப்புத்தொகை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையின்படி, உள்ளூர் கடன் மறுசீரமைப்பின் போது அந்த வைப்புத்தொகைகளுக்கு வழங்கப்படும் 09% வட்டி பாதிக்கப்படாது என தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று (29) காலை அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளார் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வங்கி அமைப்பு
அத்துடன், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையிலிருந்து வங்கி அமைப்பு விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, வங்கி அமைப்பு ஏற்கனவே 50% க்கும் அதிகமான வரிகள் மூலம் திறைசேரிக்கும் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, 5 மில்லியன் வைப்பாளர்களைப் பாதுகாப்பதை உறுதி செய்வதாகவும் ஊழியர் சேமலாப நிதியத்தின் மீது கைவைக்கும் எண்ணம் இல்லையென உறுதியளிக்கும் மத்திய வங்கி ஆளுநர், ஊழியர் சேமலாப நிதியத்திற்கு குறைந்தபட்சம் 9% வட்டி வீதத்தை உறுதிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ளும் வரையில் பணப்புழக்கம் தொடர்பிலான ஊகங்களை தடுப்பதற்காகவே வெள்ளிக்கிழமை (30) வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் வங்கித் துறையில் சரிவு ஏற்பட்டால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதால் வங்கித் துறையைப் பாதுகாக்க வேண்டியது அத்தியாவசியமானது என உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.