முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
அரசாங்கம் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வியடத்தினை தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.
பால் மா மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகளை உயர்த்திக்கொண்டு, எரிபொருள் விலையை 15 ரூபாயால் குறைப்பது அரசாங்கத்தின் ஒரு தந்திரோபாய நடவடிக்கை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "தற்போது அரசாங்கம் எரிபொருள் விலையைத் திருத்தியமைத்து ஒக்டேன் 92 ரக பெட்ரோலை மேலும் 15 ரூபாயால் குறைத்துள்ளது.
உண்மையில் இந்த நேரத்தில் அரசாங்கம் மிகவும் தந்திரமான முறையிலேயே இந்த வேலையைச் செய்கிறது. ஏனெனில் ஒரு புறம் பால் மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை உயர்த்திக்கொண்டு, மறுபுறம் எரிபொருள் விலையில் 15 ரூபாயைக் குறைக்கிறார்கள்.

ஆனால் முச்சக்கர வண்டி சேவைக்கான கட்டணங்கள் குறித்துக் கூறுவதானால், இந்த முறைப்படுத்தலுக்குரிய அனைத்து விலைகளையும் குறிப்பிட்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனைத்து நடவடிக்கைகளையும் அமைச்சிடம் ஒப்படைத்துள்ளது.
தற்போது அமைச்சு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று, அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரிடம் அனுப்பியுள்ளது.
எனவே சட்டமா அதிபரே இது குறித்து விரைவாக நடவடிக்கை எடுத்து நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கு அனுமதி பெறப்பட்டு கையொப்பமிட்ட பின்னரே இது சட்டமாக மாறும்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
இப்போது எம்மால் வழக்கம்போல மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் விலைக் கட்டுப்பாட்டுக் குழுவிடம் கோரிக்கை விடுக்க முடியாது.
ஏனெனில் கடந்த காலத்தில் நாங்கள் கோரிக்கை விடுத்தபோது, அதன் தலைவர் தெளிவாகக் குறிப்பிட்டார், இனி இந்த விலை குறித்து நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்று. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடனேயே இது பற்றிப் பேசுமாறு கூறினார்கள்.

தற்போது நாங்கள் இந்த வேலைகள் அனைத்தையும் முடித்துள்ளோம். தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இது குறித்து எப்போது நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
எனவே, சட்டபூர்வமான விலை வரும் வரை பழைய விலையையே நாங்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதாவது முதலாவது கிலோமீற்றருக்கு 110 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றருக்கு 90 ரூபாயும் என்ற வரம்பிற்குள்ளேயே இருக்க வேண்டியுள்ளது.
ஆனால் பொது வீதிகளில் சாதாரண முச்சக்கர வண்டி பயன்பாட்டில் 110, 120 ரூபாய் என்ற அடிப்படையிலேயே கட்டணம் அறவிடப்படுகிறது.
இன்னும் இது சட்டமாக நடைமுறைப்படுத்தப்படாததாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறைமையின் கீழ் மிக விரைவில் புதிய விலைகள் வரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |