சர்வதேசத்திற்கு முன் சிறிலங்கா துண்டாடப்படுவது ஏன்? அரசாங்கத்திற்கு ஆலோசனை
சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்து பொறுப்பு கூறும் கடப்பாட்டை சர்வதேசத்திற்கு முன்பாக நிறைவேற்றும்படி சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஆலோசனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய மனோ கணேசன், அநுராதபுரம் சிறையில் அண்மையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம் பற்றி விசாரணை நடத்த நியமிக்கும் குழு ஊடாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை பரிந்துரைக்குமாறும் அவர் வலியுறுத்தினார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“அநுராதபுரம் சிறையில் இடம்பெற்ற சம்பவங்கள் காரணமாகவே சிறிலங்கா அரசாங்கம் இன்று சர்வதேசத்திற்கு முன்பாக பதிலளிக்கக் கடமைபட்டிருக்கின்றது. 89 களில் ஏற்பட்ட கறுப்பு ஜுலைக் கலவரத்திற்கும் நாங்கள் எதிர்ப்பையே வெளியிடுகின்றோம். அது இன்றும் பிழை என்றே தெரிவிக்கின்றோம்.
1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கொலையைப் போன்றே அநுராதபுரம் சிறையிலும் இடம்பெற வாய்ப்பிருந்தது. இராஜாங்க அமைச்சர் அநுராதபுரம் சிறைக்குள் சென்று தமிழ் அரசியல் கைதிகள் மீது துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தினார். அது முற்றிலும் பிழை.
இந்த சம்பவத்தை இனவாதமாக தமிழ் உறுப்பினர்கள் பயன்படுத்துவதாக விமர்சனம் வெளியிடுவதையும் நாங்கள் ஏற்கமுடியாது.
நான் அன்று குறித்த சிறைக்குச் சென்றபோது சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் என்னுடன் இருந்தனர். இனவாத நடவடிக்கையென்று திசைதிருப்ப வேண்டாம்.
இதுபோன்ற அறிவிப்புக்கள் காரணமாகவே இன்று சர்வதேசத்திற்கு முன்பாக சிறிலங்கா விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.
நீதியமைச்சர் அலிசப்ரி இந்த விடயம் பற்றி இன்று பதிலளித்தார். இதுகுறித்த விசாரணைகளை நடத்துவதாக தெரிவித்தார். ஆனால் 89களில் இடம்பெற்றது போலவும் அண்மையில் திகன பகுதியில் இடம்பெற்றது போல கலவரச் சம்பவம் அல்ல. இது அப்பட்டமாகவே இடம்பெற்ற சம்பவமாகும்.
தமிழ் சமூகத்துடன் பேச்சுக்குத் தயார் என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்த போதிலும் அமைச்சர்களின் இதுபோன்ற செயற்பாடுகள் காரணமாகவே மனித உரிமை மீறல் பிரச்சினைகள் உருவெடுக்கின்றன.
ஆகவே இப்போதாவது பிழைகளை அரசாங்கம் திருத்திக்கொள்ள வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்து, சர்வதேசத்திற்கு முன்பாக பொறுப்புகூறலை உறுதிசெய்யவும் ,தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முயற்சிக்கவும்” என்றார்.