வற்வரி தொடர்பில் வெளியான நற்செய்தி!
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக வற் வரி அதிகரிக்கப்பட்டதனால் அரசாங்கம் எதிர்பார்த்த வருமானம் தற்போது கிடைக்கப்பெற்று வருகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை அதிகரிக்கப்பட்ட வற்வரியை மீண்டும் நூற்றுக்கு 15 வீதமாக குறைப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பிரச்சினைகளுக்குத் தீர்வு
“வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கும்போது சில கடுமையான தீர்மானங்களை எடுப்பது தவிர்க்கமுடியாத விடயமாகும். இதனால் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏதோ ஒருவகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் மக்களுக்கு பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதை நாங்கள் உணர்ந்து வருகிறோம். இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசாங்கம் படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறிப்பாக 2022இல் அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்கும் போது திறைசேரியில் 852 பில்லியன் ரூபா மறை பெறுமானத்திலேயே இருந்தது. ஆனால் 2023 நிறைவடையும்போது எமது அடிப்படை செலவுகளுக்கு ஒதுக்கிய பின்னர் திறைசேரியில் 52 பில்லியன் ரூபா மீதமாகி இருந்தது.
வற் வரி அதிகரிப்பு
அனைவரின் அர்ப்பணிப்பின் மூலமே இதனை செய்ய முடியுமாகியது. விசேடமாக நிதி அமைச்சின் அதிகாரிகள் திறைசேரியின் அதிகாரிகள் மிகவும் அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட சேவையின் மூலமே இந்த இலக்கை எமக்கு எட்ட முடிந்தது.
மேலும் இந்த பொருளாதார அபிவிருத்திக்கு வற் வரி அதிகரிக்கப்பட்டதுடன் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய வருமானங்களை முறையாகச் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோன்று நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானங்களைப் பெற்றுக்கொள்ள முறையான வேலைத்திட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதன் காரணமாக தற்போது அரசாங்கம் எதிர்பார்த்த வருமானங்கள் கிடைக்கப்பெற்று வருவதால், இறுதியாக அதிகரிக்கப்பட்ட வற்வரியை மீண்டும் நூற்றுக்கு 15வீதமாக குறைப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி இருக்கிறது.
மக்களுக்கு நிவாரணம்
இன்னும் ஒரு சில மாதங்களில் வற்வரியை நூற்றுக்கு 15 வீதம் வரை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்க்கிறோம்.
மேலும் நாடு ஸ்திரநிலையை அடைந்துவரும் நிலையில் நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி, தற்போது முன்னெடுத்துச்செல்லப்படும் ஆட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதா அல்லது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அமைக்கப்பட்டிருக்கும் வேலைத்திட்டத்தை அவ்வாறே தொடர்ந்து முன்னுக்குக் கொண்டு செல்வதா என்பதே மக்கள் முன்னால் இருக்கும் சவாலாகும்.
அதனால் மனங்களை மாற்றும் வார்த்தைகளுக்கு ஏமாந்துவிடாமல் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |