இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்கு புதிய நிறுவனம் - ரணிலின் திட்டம்!
இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்காக புதிய நிறுவனம் ஒன்று விரைவில் உருவாக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற றோயல் ஆசிய சங்கத்தின் 178 ஆவது கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தேசிய அருங்காட்சியகம், ஆவணக் காப்பகத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கலாசார முக்கோணம், பல்கலைக்கழகங்கள் மற்றும் றோயல் ஆசிய சங்கம் என்பனவற்றை இணைத்து, அதற்கான சட்ட வரைவை நிறைவு செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்ட வரைவு நடவடிக்கை
இலங்கையில் உள்ள றோயல் ஆசிய சங்கம் மற்றும் கல்கத்தா கிளை ஆகியவை துணைக்கண்டத்தின் வரலாற்றை பதிவு செய்வதில் பெறுமதி மிக்க சேவையை ஆற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மகாவம்சத்தைப் போலவே, அரசியல் விமர்சகர்களும் எழுதப்படாத வரலாற்றை ஆராய்ந்தே இந்திய வரலாற்றை விளக்குகிறார்கள். எனினும் வரலாற்றுக்கு ஒரு பாரம்பரியம் உள்ளது எனவும் அந்த வரலாற்றை நாம் தொடர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனால் வரலாற்றுக்கான ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கவுள்ளதாகவும் அதற்காக பல்கலைக்கழகங்கள், தொல்பொருள் திணைக்களம் மற்றும் றோயல் ஆசிய சங்கம் ஆகியவற்றுடன் கலந்துரையாடி இறுதி வரைவை தயாரித்து வருவதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.
