ஆட்கடத்தல் பட்டியலில் இலங்கை 2 ஆம் இடத்திற்கு தரமுயர்வு
ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கை
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கையில் இலங்கை 2 ஆம் இடத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய ஆட்கடத்தல் தடுப்புச் செயலணிக்கு தலைமை வகிக்கும் பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் அமெரிக்க சட்டத்தின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட ஆட்கடத்தல் அறிக்கையானது, மனித கடத்தல் தொடர்பில் வெளிநாட்டு அரசாங்கங்களுடன் தொடர்புகொள்ள அமெரிக்க அரசாங்கத்தின் முக்கிய இராஜதந்திர கருவியாக கருதப்படுகிறது.
மேலும் ஆட்கடத்தலுக்கு எதிரான முயற்சிகளில் உலக நாடுகளுக்கு மத்தியில் விரிவான ஆதாரமாகவும் இது காணப்படுகிறது.
குறைந்தபட்ச தரங்களை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை
இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் ஆட்கடத்தலை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச தரங்களை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அவதானித்துள்ளது.
அத்துடன் முதலாமிடத்திற்கு முன்னேறும் இலங்கையின் முயற்சிகளையும் அங்கீகரித்துள்ளது.
ஆட்கடத்தல் அறிக்கை முன்னுரிமைப்படுத்தியுள்ள பரிந்துரைகளை தேசிய ஆட்கடத்தல் தடுப்புச் செயலணி முழுவதுமாக அடைவதற்கும், ஆட்கடத்தல் குற்ற நடவடிக்கைகளை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என அறிவித்துள்ளது.