கொடுங்கோல் செயற்பாடுகளை உடன் நிறுத்துக - எதிர்க்கட்சிகள் கூட்டாக கோரிக்கை
அரசாங்கம் திட்டமிட்ட கைது நடவடிக்கை
இலங்கையில் அராசங்கத்திற்கு எதிராக போராடும் மக்களின் எண்ணங்களை திசை திருப்பும் வகையிலேயே அரசாங்கம் திட்டமிட்ட கைது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
அடக்குமுறை கொடுங்கோல் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டு ஜனநாயகத்தை அனுபவிக்கும் சிறப்புரிமைகளை நாட்டு மக்களுக்கு வழங்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹகீம், இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொது மக்களின் அமைதியான போராட்டங்களுக்கு நிபந்தனையின்றி ஆதரவு
இதன்போது கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மிலேச்சத்தனத்தை அல்லது பயங்கரவாதத்தை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அங்கீகரிக்கவில்லை எனவும், பொது மக்களின் அமைதியான போராட்டங்களுக்கு நிபந்தனையின்றி ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார். அடக்குமுறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
துப்பாக்கி ரவைகள், வெடிகுண்டுகள் மற்றும் வாள்கள் மூலம் மக்களை அடக்க முடியும் என அரசாங்கம் நம்பினால் அது வெறும் கேலிக்கூத்து என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த அடக்குமுறைக்கு எதிராக முற்போக்கான எதிர்க்கட்சிகளின் சகல சக்திகளையும் ஒன்றிணைப்பதாகவும் தெரிவித்தார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோரும் கருத்து வெளியிட்டனர்.
