இலங்கை மீதான ட்ரம்பின் வரி விதிப்பு : நாமல் வெளியிட்ட தகவல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இலங்கை மீது விதித்துள்ள வரியை அனுதாபப்பட்டு மாற்றினாலன்றி, இந்த அரசாங்கத்தால் எதையும் செய்ய முடியாது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள பொதுஜன பெரமுன (SLPP) அலுவலகத்தில் நேற்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், ”உலகின் வற் வரி நிலைவரம் தொடர்பில் இப்போதும் அரசாங்கத்துக்கு எதுவும் தெரியாது. இவ்வாறு எவ்வித அறிவும் இன்றி திட்டமிடலொன்று இன்றி வரி அறவிடப்படுகிறது.
பதவி விலகிய கோட்டாபய ராஜபக்ச
திட்டமிடலொன்று இன்றி வரி அறவிடப்படும் போது பொருட்களின் விலைகள் மற்றும் சேவைக் கட்டணங்களும் சடுதியாக அதிகரிக்கும். வரி விவகாரத்தில் மாத்திரமின்றி எந்தவொரு விடயத்திலும் அரசாங்கம் திட்டமிடல் இன்றியே தீர்மானங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஜனாதிபதியால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்துக்கான பதில் கடிதம் கிடைக்கும் வரை காத்திருக்கின்றோம். ஜனாதிபதி செயலகம் தபாலகத்துக்கு அருகில் காத்திருப்பதாகவே தகவல்கள் கிடைத்துள்ளன. ட்ரம்ப் இலங்கை மீது அனுதாபப்பட்டு தீர்மானத்தை மாற்றினாலன்றி, இந்த அரசாங்கத்தால் எதையும் செய்ய முடியாது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) பதவி விலகினார். அன்று நாம் அடைந்த துயரத்தை விட இன்று அவரை பதவி விலகச் செய்தவர்கள் துன்பத்தை அனுபவிக்கின்றனர்.
எனினும் அனைத்து மக்களையும் அந்த துயரத்திலிருந்து மீட்பதற்கான பொறுப்பு எமக்கிருக்கிறது. விரைவில் நாம் அதற்குரிய செயற்பாடுகளில் ஈடுபடுவோம்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
