முதியோர் இல்லமாக மாறும் நாடாளுமன்றம்! பௌத்த தேரர் விசனம்
நாடாளுமன்றத்தில் தற்போது உறுப்பினர்களாக உள்ள சில அரசியல்வாதிகள் விரைவில் பதவி விலக வேண்டுமென ராமஞ்ஞ பீடத்தின் கப்பிட்டியகொட சிறிவிமல தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிட்டால், விரைவில் நாடாளுமன்றம் முதியோர் இல்லமாக மாறி விடுமென அவர் கேளிக்கையாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டுமென சட்டம் உள்ளதாக ராமஞ்ஞ பீடத்தின் கப்பிட்டியகொட சிறிவிமல தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய சட்டம்
எனினும், 60 வயதுக்கும் மேற்பட்ட பலர் தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தற்போதைய நாடாளுமன்றில் உள்ள வயோதிபர்கள் பதவி விலக வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்துக்கமைய நாடாளுமன்றில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் பதவி விலகாவிட்டால், அவர்களுக்கு எதிராக புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
சட்ட நடவடிக்கை
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்காக பணியாற்றுவதில்லை எனவும் நாட்டின் வளங்களை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்வதை நோக்கமாக கொண்டு செயல்படுவதாக கப்பிட்டியகொட சிறிவிமல தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் உள்ள சாதாரண பிரஜை ஒருவர் 50 ரூபாய் திருடினால் அவருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், நாடாளுமன்றத்துக்குள் இருந்தவாறு பில்லியன் கணக்கில் திருடுபவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சாதாரண பிரஜைக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படும் சட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிராக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |