சபாநாயகரை மொட்டு கட்சி காப்பாற்றும்! எதிர்க்கட்சி ஆதங்கம்
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை மொட்டு கட்சி காப்பாற்றியது போல சபாநாயகரையும் காப்பாற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து, புதன்கிழமை மாலை இந்த பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
மொட்டு கட்சி
இந்த நிலையில், குறித்த பிரேரணைக்கு எதிராக சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கில்லை என எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
தரக்குறைவான மருந்தினை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்த போது, அதனை மொட்டு கட்சியினர் தோற்கடித்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நீதித்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
மிக மோசமான சபாநாயகர்
இதேபோல், இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக மோசமான சபாநாயகராக பதிவாகியுள்ள மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு ஆதரவாக பொதுஜன பெரமுனவினர் வாக்களித்தால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என மரிக்கார் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |