பிரான்சிலும் மாயமான சிறிலங்கா காவல்துறை உத்தியோகத்தர்
பிரான்சில் நடைபெற்ற சர்வதேச காவல்துறை சங்கத்தின் (IPA) உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேல்மாகாண காவல்துறை போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் குறித்த அதிகாரி, மே மாதம் நாடு திரும்பியிருக்கவேண்டும். உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் அவர் நாடு திரும்பாதது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த காவல்துறை கான்ஸ்டபிள் பிரான்சில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பதவியிலிருந்து விலகியதாக
மேல்மாகாண காவல்துறை போக்குவரத்துப் பிரிவினால் சனிக்கிழமை (17) குறித்த உத்தியோகத்தர் பதவியிலிருந்து விலகியதாகக் கருதப்படும் அதிகாரியாக அறிவிக்கும் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
லண்டனிலும் காணாமற்போன சிறிலங்கா காவல்துறை உத்தியோகத்தர்கள்
கடந்த வாரம் இங்கிலாந்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்குபற்றச் சென்ற சிறிலங்கா காவல்துறை விளையாட்டுப் பிரிவின் நான்கு அதிகாரிகளும் இலங்கை திரும்பவில்லை. அதுமட்டுமன்றி, அதிகாரிகளுடன் சென்ற உதவி காவல்துறை அதிகாரி ஒருவர் ஐந்து ஆண்டுகள் விடுமுறை எடுத்துவிட்டு இங்கிலாந்தில் தங்க முடிவு செய்துள்ளதாகவும் காவல்துறை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இலங்கை விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்ட பின்னர் நாடு திரும்பாத சம்பவங்கள் கடந்த ஆண்டு பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
