அதிபர் ரணிலின் ஈஸ்டர் தின வாழ்த்துச் செய்தி
நாட்டிலுள்ள கிறிஸ்தவ மக்களுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது ஈஸ்டர் தின வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு.
“உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் முகமாக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
பொருளாதார சவால்
இயேசுவின் துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் 40 நாள் தவக் காலத்தில் கிறிஸ்தவர்கள் மதக் கடமைகளில் ஈடுபடுகின்றனர்.
வரலாற்றி மிக மோசமான பொருளாதார சவாலை எதிர்கொண்ட ஒரு நாடு என்ற வகையில், தாங்கிக்கொள்ளும் இயலுமை நிறைந்த தேசமாக ஆசிர்வாதத்துடன் உயிர்த்தெழ ஆரம்பித்திருக்கிறோம்.
பல்லின சமூகமாக வாழும் நாடு என்ற வகையில் இலங்கை தற்காலத்தில் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்காக ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும்.
எனவே, இலங்கையர்களாகிய நாம் எமது ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பேணுவதுடன், அதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு சக்திகளிடமும் சிக்கிக்கொள்ளாமல், அறிவுபூர்வமாக நாட்டின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் அபிவிருத்திக்காக அர்பணிக்க வேண்டியது அவசிமாகும்.
தீவிரவாத தாக்குதல்
இலங்கை கிறிஸ்தவர்களால் மிகுந்த மரியாதையுடனும் பக்தியுடனும் கொண்டாடப்படும் ஈஸ்டர் காலம் ஒரு கொடூரமான தீவிரவாத தாக்குதலை கண்டிருந்தது. அந்த மோசமான நினைவுகள் எமது மனங்களில் இருந்து மறையாது.
அதேநேரம் அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக சுதந்திரமாகவும் பாரபட்சம் இன்றியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
அத்துடன் இனிவரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கும் வகையில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் அர்ப்பணிக்கும்.
அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான ஈஸ்டர் நாளாகட்டும் என பிராத்திக்கிறேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |