தமிழர் உரிமைக்கான மாபெரும் பேரணி - யாழ் மாவட்ட செயலகத்தை வந்தடைந்துள்ளது!
வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர் தாயக பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளையும் கண்டித்து இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை தமிழர்களுக்கான கரிநாள் என வலியுறுத்தி நடைபெறும் பேரணி தற்போது யாழ் மாவட்ட செயலகத்தை அண்மித்துள்ளது.
இந்நிலையில் வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து குறித்த கரிநாள் பேரணி ஆரம்பமாகியிருந்தது.
முற்பகல் 10 மணிக்கு யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகிய பேரணி நாச்சிமார் கோவிலடியூடாக பிரதான தபால் அலுவலகம், தமிழாராய்ச்சி மண்டபம், யாழ். மத்திய பேருந்து நிலையம் மற்றும் வைத்தியசாலை வீதி வழியாக கச்சேரியடியை வந்தடைந்துள்ளது, தொடர்ந்து அங்கிருந்து செம்மணி பகுதியைச் சென்றடையும்.
பின்னர், செம்மணியிலிருந்து வாகனங்களில் பயணிக்கும் பேரணியானது நாவற்குழி, சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில், பளை, ஆனையிறவு, பரந்தன் ஊடாக கிளிநொச்சியை சென்றடைந்து, முதலாம் நாளானது இரணைமடுவில் நிறைவடையவுள்ளது.