முல்லைத்தீவில் இ.போ.ச சாலை ஊழியர்களின் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டம்(படங்கள்)
நியதிச்சட்டத்திற்கு அமைவாக 60 க்கு 40 நேர அட்டவணையை நடைமுறைப்படுத்துமாறு கோரி முல்லைத்தீவு சாலை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
60 க்கு 40 நேரங்கள் அட்டவணை நடைமுறைப்படுத்துவதாக பல தடவைகள் தெரிவித்த போதும், இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் தொடர்ச்சியாக தமது பேருந்துகள் சேவை வழங்குவதில் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதோடு பேருந்துகள் மீதான தாக்குதல்கள் ஊழியர்கள் மீதான தாக்குதலும் இடம்பெற்று வருகிறது.
இவ்வாறான நிலையில் இன்று காலையும் தங்களுடைய பேருந்து யாழ்ப்பாணம் சென்றபோது அதனை தனியார் பேருந்து சாரதிகள் நடத்துனர்கள் மறித்து தங்களுடைய சாரதி மீதும் பேருந்து நடத்துனர் மீதும் தாக்குதல்கள் நடத்தினர்.
கால வரையறையற்ற போராட்டம்
இதில் நடத்துனர் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்வாறான நிலையில் உரிய நேர அட்டவணையை நடைமுறைப்படுத்தப்படாமையே தங்களது இந்த முரண்பாடுகளுக்கு காரணம் எனவும் எனவே தமக்கான உரிய நேரங்களை வழங்கி மக்களுக்கான சேவைகளை சரியாக வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இந்த கால வரையறையற்ற போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமக்கு நிரந்தர தீர்வாக இந்த 60க்கு 40 சேவை உரிய வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவாதம் கிடைக்காமல் தங்களது போராட்டம் நிறுத்தப்படமாட்டாது என ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |