இலங்கைக்கு கிடைக்கவுள்ள 330 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
சர்வதேச நாணய நிதிய ஊழியர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகள் இடையிலான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஒத்துழைப்பு திட்டத்தின் முதல் மதிப்பாய்வு நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கான பொருளாதாரக் கொள்கைகள் குறித்த பணியாளர் அளவிலான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களின் பின்னர் மொரோக்கோவில் இடம்பெற்று வரும் வருடாந்த கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரி பீட்டர் ப்ரூயர் (Peter Breuer) மற்றும் கட்சியரினா ஸ்விரிட்சென்கா (Katsiaryna Svirydzenka) ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
330 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி கிடைத்தவுடன் இலங்கைக்கு 254 மில்லியன் விசேட கொள்வனவு உரிமைகள் (சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்) நிதியுதவி கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தினால் விரிவான கடன் வசதியின் கீழ் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி உதவித்தொகையானது 660 மில்லியன் டொலராக கணிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பருப்பொருளியல் கொள்கை சீர்திருத்தங்கள் பலனைத் தர ஆரம்பித்துள்ளன எனவும், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான தாளில் அறிகுறிகளை காட்டுவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் இறுதி அறிக்கை தெரிவித்துள்ளது.