தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட மலர்ச் செடிகளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய பெண்!
தாய்லாந்து - பாங்கொக் நகரிலிருந்து பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைத்துச் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான மலர்ச் செடிகளுடன் இலங்கைப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பாங்கொக்கிலிருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL 403 என்ற விமானம் மூலம் அப்பயணி கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற போது, சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்கப் பிரிவின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து அவரை மறித்துச் சோதனை செய்தபோது அவரது பைகளிலிருந்து மலர்ச்செடிகள் மீட்கப்பட்டன.
பிரச்சினை என்றால் வெறியேறு! அர்ச்சுனாவின் கருத்தால் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆவேசமடைந்த பிரதிநிதிகள்!
தாவரப் பாதுகாப்புச் சட்டம்
நாட்டின் 1993 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் படி, தாவரங்களையோ அல்லது அவற்றின் பாகங்களையோ நாட்ககுள் இறக்குமதி செய்வதற்கு கடுமையான விதிமுறைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் கட்டாயம் இருக்க வேண்டும்.
ஏற்றுமதி செய்யும் நாட்டிலிருந்து (தாய்லாந்து), அந்தத் தாவரங்களில் பூச்சிகள் மற்றும் நோய்க்கிருமிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் 'தாவர தனிமைப்படுத்தல் சான்றிதழ்' சமர்ப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசுடைமையாக்கப்பட்ட செடிகள்
இந்த விதிமுறைகளை மீறிச் செய்யப்படும் எந்தவொரு இறக்குமதியும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமான செயலாகவும் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுங்கப் பிரிவினரின் ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கடத்தி வரப்பட்ட அனைத்து மலர்ச் செடிகளும் அரசுடைமையாக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட செடிகள் அனைத்தும் அடுத்தகட்ட அழிப்பு நடவடிக்கைகளுக்காக விமான நிலைய தாவர தனிமைப்படுத்தல் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |