உலக வங்கியின் நிதியை சூறையாடிய முன்னாள் அமைச்சர்கள் : அம்பலப்படுத்திய அநுர அரசு
பெருந்தோட்டத்துறை அபிவிருத்திக்காக கடந்த காலங்களில் உலக வங்கியால் வழங்கப்பட்ட நிதியை முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, ரொஷான் ரணசிங்க உட்பட அரசியல்வாதிகளின் உறவினர்கள் பகிர்ந்து கொண்டுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன (Samantha Viddyarathna) தெரிவித்துள்ளார்.
நிதியை முறைகேடாக பயன்படுத்திய தரப்பினருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (12) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நிதியை மோசடி செய்தவர்கள்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, “ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கங்களில் அரச நிதி முறையாக பயன்படுத்தப்பட்டதா என்பது இன்றளவிலும் பிரச்சினைக்குரியதாக காணப்படுகிறது.

கடந்த அரசாங்கங்களின் போது பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சுக்கு உலக வங்கி ஒதுக்கியிருந்த நிதி ஊடாக பெருந்தோட்ட தொழிற்றுறையை மேம்படுத்தவும், அந்த தொழிற்றுறையில் ஈடுபடுபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
உலக வங்கியால் கிடைக்கப்பெற்ற நிதியில் 149.5 இலட்சம் ரூபாய் முன்னாள் அமைச்சர் தயா கமேகவின் மனைவிக்கும், 180 இலட்சம் ரூபாய் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் மனைவிக்கும், 85 இலட்சம் ரூபாய் தயா கமகேவின் செயலாளருக்கும், 375 இலட்சம் ரூபாய் முன்னாள் அமைச்சர் லக்ஷமன் செனவிரத்னவின் மகனுக்கும், 481இலட்சம் ரூபாய் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் சகோதரருக்கு என்ற அடிப்படையில் நிதி வழங்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சு தீர்மானம்
ஆனால் குறித்த அபிவிருத்தி செயற்திட்டம் முழுமைப்படுத்தப்படவில்லை. இந்த செயற்திட்டம் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பின் கள ஆய்வினை மேற்கொண்ட உலக வங்கி குறித்த நிதியை மீள ஒப்படைக்குமாறு குறிப்பிட்டது.
இந்த விடயம் தொடர்பில் உலக வங்கியிடம் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு நிதியை செலுத்துவதற்கு காலவகாசம் கோரியிருந்தோம். இருப்பினும் உலக வங்கி அதற்கு அனுமதி வழங்கவில்லை.

வழங்கப்பட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நிதியை மீள செலுத்துங்கள் அல்லது இலங்கைக்கான சகல நிதியுதவிகளும் நிறுத்தப்படும் என்று உலக வங்கி அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து 5 இலட்சத்து 8863 டொலரை செலுத்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இவர்களின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிக்கும் நாங்கள் சர்வதேச மட்டத்தில் பொறுப்புக்கூற வேண்டியது.
பெருந்தோட்ட அமைச்சுக்கு உலக வங்கியால் கிடைத்த நிதியை முறைகேடாக பயன்படுத்தியவர்கள் இன்று பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கவுள்ள 200 ரூபா சம்பள அதிகரிப்பை கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.
உலக வங்கியால் கிடைக்கப்பெற்ற நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |