மீண்டும் மைத்திரி - ரணில் கூட்டு!! முடிவுகளில் மாற்றம் - சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.
முன்னாள் அரச தலைவரும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன கடிதம் ஒன்றின் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இதனை அறிவித்துள்ளார்.
இதன் ஊடாக ரணிலின் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும் அமைச்சுக்களை ஏற்றுக்கொள்வதற்கும் சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.
இதன்படி, அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைச்சர்கள் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் அமைச்சுப் பதவிகளை ஏற்க வாய்ப்புள்ளது.
புதிய அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்கப் போவதில்லை என கடந்த நாட்களில் கூறியிருந்தாலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் நிலைப்பாட்டை மீறுவதற்கு பரிசீலித்து வருவதை உணர்ந்ததும், அவர்கள் முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளனர்.
மைத்திரி - ரணிலின் நல்லாட்சி
மைத்திரி - ரணில் நல்லாட்சி 2015 ஆம் ஆண்டு நன்றாகத்தான் ஆரம்பத்தை கண்டது. ரணிலும் மைத்திரியும் இலங்கை அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வர் என்ற நம்பிக்கை இலங்கையர்களிடம் இருந்தது.
ஜே.ஆரின் திறந்த பொருளாதார கொள்கையில் ஊறி வளர்ந்த ரணில் விக்ரமசிங்க சிறந்த அரசியல் இராஜதந்திரியாக விளங்கியமையால் ஆட்சியை பொறுப்பேற்றவுடன் அரச தலைவரின் அதிகாரங்களை குறைத்து 19 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்தார்.
நாடாளுமன்றத்துக்கும் பிரதமருக்கும் அதிகாரங்களை அதிகரித்து, நாட்டை பொருளாதார ரீதியில் ஸ்தரப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.
ஆனால் அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத, ரணிலின் பொருளாதாரக் கொள்கைகளை மட்டுமின்றி அரசியல் சாணக்கியங்களையும் புரிந்து கொள்ளாத மைத்திரி சிறுபிள்ளை போல அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் பலவீனமான நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் இவரே என்பதை நாட்டு மக்களே உணர்ந்து கொண்ட தருணம் அது.
தடம் மாறியது எப்படி?
அப்படியிக்கும் போது கண்களில் எண்ணெய் விட்டு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த மஹிந்த அணியினரைப் பற்றி கூற வேண்டுமா? உடனடியாக தமது கட்டுப்பாட்டுக்குள் மைத்திரியை கொண்டு வந்தனர். திரை மறைவில் பல திட்டங்கள் அரங்கேறின.
2018 ஒக்டோபர் மாதம், அரசியலமைப்பு பற்றிய அறிவு, மற்றும் அரசியல் தீர்க்கதரிசனமற்ற மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கினார். நாடாளுமன்றத்தை கலைத்தார். இதை சவாலுக்குட்படுத்தினார் ரணில்.
அவரது சட்ட நுணுக்கங்கள், அரசியல் முதிர்ச்சிக்கு முன்பாக மஹிந்த அணியினரும் மைத்திரியும் தோற்றுப் போயினர்.
தனி ஒரு மனிதராக உயர்நீதிமன்ற தீர்ப்பைப் பெற்று மீண்டும் பிரதமரானார் ரணில். அத்தருணத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதே மஹிந்த அணியினரின் நோக்கமாக இருந்ததே ஒழிய புத்திசாலித்தனம் இருக்கவில்லை.
எந்த வித அரசியல் மற்றும் நிர்வாக அறிவும் இல்லாதவராகவே அரச தலைவர் மைத்திரிபால விளங்கினார். ஆகவே மைத்திரி தெரிவு செய்த பிரதமரான மஹிந்தவால் 52 நாட்கள் மட்டுமே பெயருக்கு பிரதமராக இருக்க முடிந்தது.
எனினும் மைத்திரி அன்று செய்த தவறின் தொடர்ச்சியாகத் தான் பொதுஜன பெரமுன பின்பு ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் அது எதிர்ப்பார்த்த பெறுபேறுகளைத் தரவில்லை என்பதை இரண்டு வருடங்களுக்குள் நாட்டு மக்கள் உணர்ந்து கொண்டனர்.
அதன் விளைவே இன்று வாக்களித்த மக்களே அரசாங்கத்துக்கு எதிராக வீதியிலிறங்கி உள்ளனர். ஆனால் இப்போது வரலாறு திரும்பியுள்ளது. நல்லாட்சி காலத்தில் எவ்வாறு தனி மனிதராக அனைவரையும் எதிர்கொண்டு நீதியை நிலைநாட்டினாரோ அதே பலத்துடன் நாடாளுமன்றில் தனி ஒரு மனிதராக சாணக்கிய காய்களை நகர்த்தியுள்ளார் ரணில்.
நல்லாட்சி காலத்தில் எந்த ராஜபக்சக்கள் ரணிலை பிரதமர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என கங்கணம் கட்டி திட்டம் தீட்டினார்களோ? அதே ராஜபக்சக்கள் தான் இன்று தம்மை பாதுகாக்கவும் நாட்டின் எதிர்காலத்துக்காகவும் வேறு வழியின்றி ரணிலை பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
