நிறைவேற்று அதிகார அதிபர் முறை : எதிர்ப்பு வெளியிட்டுள்ள மொட்டு கட்சி
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையின் கீழ், நிறைவேற்று அதிகார அதிபர் முறை நீக்கப்படுவதை சிறிலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார அதிபர் முறையை நீக்கிய பின்னர் தற்போதைய தேர்தல் முறைமையின் கீழ் நாடாளுமன்ற தேர்தலை நடத்தினால் எந்த கட்சியாலும் நாடாளுமன்ற பெரும்பான்மையை பெறமுடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறைவேற்று அதிகார அதிபர் முறை
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகார அதிபர் முறை நீக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுன இருப்பதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எனினும், தேர்தல் முறை மாற்றப்பட்டதன் பின்னர் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் வேட்பாளரை கொண்ட அரசியல் கட்சியொன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறும் தேர்தல் முறைமை நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் வரை நிறைவேற்று அதிகார அதிபர் முறை நீக்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் தேர்தல்
இதேவேளை, நிறைவேற்று அதிகார அதிபர் முறையை நீக்குவது தொடர்பான முன்மொழிவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் இந்த நடவடிக்கையின் மூலம் அதிபர் தேர்தலை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |