தமிழ் மக்களை ஏமாற்றும் கலாச்சாரம் மொட்டுவிற்கு இல்லை: நாமல் வெளிப்படை
இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்களை மாத்திரம் இலக்காக கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றும் கலாச்சாரம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு (SLPP) இல்லை என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று ஆரம்பமான கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து உரையாற்றும் போதே, நாமல் ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.
காணி அதிகாரங்கள்
தொடர்ந்தும் அவர் கூறுகையில், உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது. வடக்கு வாழ் மக்களை தேர்தல் காலத்தில் ஏமாற்ற நாம் தயார் இல்லை. ஏமாற்றுவதில் எந்தவொரு பலனும் இல்லை.
நாம் தமிழ் கலாச்சாராத்தை பாதுகாக்கும் தரப்பினர். மொழியை எம்மால் பாதுகாக்க முடியும். எனினும், காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்க முடியாது.
போலி வாக்குறுதிகள்
வடக்கு மற்றும் கிழக்கை இணைக்கும் நடவடிக்கையை நாம் செய்ய மாட்டோம். எம்மால் முடியுமானதை முடியுமென கூறுவோம். முடியாததை முடியாது என வெளிப்படையாக கூறுவோம். போலி வாக்குறுதிகளுடன் எமது கட்சி அரசியலில் ஈடுபடாது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பொருளாதார ரீதியில் தோல்வியடைந்திருந்தாலும், மக்களை மையமாக கொண்டு செயல்படும் அரசாங்கமாக வெற்றியடைந்திருந்தது. எனினும், காலிமுகத்திடல் போராட்டம் காரணமாக பின்னர் அவர் பதவி விலகினார்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |