மொட்டுவை விட்டு வெளியேறியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை! அரசியல் குழு தீர்மானம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஒழுக்கத்தை மீறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை ஒழுக்காற்றுக் குழுவுக்கு வழங்க அக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று(9)சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் நடைபெற்றது.
இதன்போது,இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி, வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள மற்றும் உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரசியல் குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதற்கமைய, அவ்வாறான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படக்கூடிய ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் அரசியல் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச
இதனிடையே, பொதுஜன பெரமுனவில் வெற்றிடமாகக் காணப்படும் தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளுக்கு விரைவில் பொருத்தமானவர்களை நியமிக்கவும் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச முன்வைத்த யோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தவிர, அனைத்து மாவட்டங்களுக்கும் மகளிர் ஒருங்கிணைப்பாளர்களை நியமிப்பதற்கும் அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |