மொட்டுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் அதிரடி கைது!
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தெஹிவளை கல்கிசை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான அமல் சில்வா இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 60 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 03 ஜீப்கள் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு போலி ஆவணங்களின் கீழ் பதிவு செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
வலான மத்திய ஊழல் தடுப்பு பணிக்குழு நடத்திய விசாரணையின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆரம்ப விசாரணை
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட 03 லேண்ட் ரோவர் மற்றும் மிட்சுபிஷி ஜீப்களின் மதிப்பு 60 மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மீதான ஆரம்ப விசாரணையில், அரசு நிறுவனங்களுக்குச் சொந்தமான, செயலிழந்த வாகனங்களின் பதிவு எண்களின் கீழ் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, இந்த வாகனங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
KM-7258 என்ற லேண்ட் ரோவர் ஜீப், இலங்கை இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட வாகனம் என தவறாக அடையாளம் காணப்பட்டதாகவும், அந்த வாகனம் இலங்கை சுங்கத்தால் இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் சுங்கப் பதிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
நீதிமன்றில் முன்னிலை
மேலும், 32-4155 என்ற எண்ணைக் கொண்ட ஜீப், தெற்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அதன் பதிவு ரத்து செய்யப்பட்டு வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த வாகனம் போலியானது மற்றும் செல்லத் தகுதியற்ற வாகனம் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் ஒருவர் அறிக்கை அளித்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை (29) நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
