படைத்தளபதிகள் மீதான பிரித்தானியாவின் தடை : கொந்தளிக்கும் மகிந்த தரப்பு
இலங்கை இராணுவத்தை சர்வதேச அரங்கில் குற்றவாளிகளாக்கும் பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு சார்பாகவே அநுர அரசாங்கம் செயற்படுகின்றது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (28) நடைபெற்ற மாவட்ட தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில், ''மனித உரிமைகள் மீறல் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரித்தானிய அரசாங்கம் முன்னாள் இராணுவ தளபதிகளான சவேந்திர சில்வா, ஜகத் ஜெயசூரிய மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக தடை விதித்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கம்
அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகவே இலங்கை இராணுவத்தினர் சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக நெருக்கடிக்குள்ளாக்கப்படுகிறார்கள். நல்லாட்சி அரசாங்கமே இதற்கான ஆரம்பத்தை ஏற்படுத்தியது.
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அறிவிக்காமலேயே 30 /1 தீர்மானத்துக்கு இணையனுசரணை வழங்க இணக்கம் தெரிவித்தது. இந்த தீர்மானத்துக்கு அமைய பல சட்டங்கள் இயற்றிக் கொள்ளப்பட்டன.
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 30/1 தீர்மானத்தில் இருந்து விலகினோம். இருப்பினும் அந்த தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் இன்றும் தாக்கம் செலுத்துகின்றன.
இலங்கையின் இராணுவ பிரதானிகளுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்தமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிரித்தானியாவின் ஒருதலைப்பட்சமான செயற்பாடு தொடர்பில் இலங்கை அரசாங்கம் வலுவான எதிர்ப்பினை வெளிப்படுத்தவில்லை.
ஆட்சிக்கு வந்துள்ள ஜேவிபி
தடை தீர்மானத்தை நிராகரிப்பதாகவோ அல்லது வன்மையாக கண்டிப்பதாகவோ அறிவிக்கவில்லை. மிதமான போக்கில் அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தை சர்வதேச அரங்கில் குற்றவாளிகளாக்கும் பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு சார்பாகவே அரசாங்கம் செயற்படுகிறது.
பிரித்தானிய அரசாங்கம் இலங்கை இராணுவத்தின் முன்னாள் பிரதானிகளுக்கு விதித்த தடையை வன்மையாக கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது. எதிர்வரும் காலங்களிலும் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததால் தான் மக்கள் விடுதலை முன்னணி இன்று ஆட்சிக்கு வந்துள்ளது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இராணுவத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கு என்றும் முன்னிற்போம். நாட்டு மக்களும் ஒருபோதும் இராணுவத்தினரை விட்டுக்கொடுக்கபோவதில்லை'' என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
