சின்னம்மை நோய்க்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) இலங்கையில் சின்னம்மை நோய்க்கான மேலதிக தடுப்பூசிகளை வழங்கும் செயற்பாட்டை துரிதப்படுத்த சுகாதார அமைச்சுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது.
தடுப்பூசியை வழங்கும் செயற்பாட்டின் முதலாவது கட்டம் 09 மாவட்டங்களில் 1,600 சிகிச்சை நிலையங்கள் ஊடாக இன்று 06ஆம் திகதி சனிக்கிழமை துரிதமாக ஆரம்பிக்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் 700க்கும் மேற்பட்ட சின்னம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதையடுத்து, இலங்கையில் இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சின்னம்மை நோய்க்கான மேலதிக தடுப்பூசி வழங்கும் திட்டத்தை சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்த, உலக சுகாதார ஸ்தாபனத்துடன் (WHO) இணைந்து ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.
இரண்டு கட்டங்கள்
மேலதிக தடுப்பூசி செயற்பாடு இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதன் முதலாவது கட்டம் அதிக சனத்தொகையை கொண்ட அடையாளம் காணப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் 06 – 09 வயது குழந்தைகளை இலக்கு வைத்து இன்று 06ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் சின்னம்மை நோய் பதிவுகள் அதிகம் காணப்படுவதால் இந்தப் பகுதிகளில் முதற்கட்டம் தடுப்பூசி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இரண்டாவது கட்டம் ஜனவரி 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருப்பதுடன், இது நாடு முழுவதிலுமுள்ள ஏனைய வயதுப் பிரிவினருக்கு விஸ்தரிக்கப்படும்.
மேலதிக தடுப்பூசி செயற்பாடு
மேலதிக தடுப்பூசி செயற்பாடு குறித்து அறிவிக்கும் முகமாக அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய நாடுக்ள சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டின் ஸ்கூக் குறிப்பிடுகையில்,
“இலங்கையில் தேசிய தடுப்பூசி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியன பல ஆண்டுகளாக சுகாதார அமைச்சுடன் நெருக்கமாக இணைந்த பணியாற்றி வருகிறது.
அதிகமானவர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டாலும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத குழந்தைகள் மத்தியில் குறிப்பாக பிராந்தியத்தில் தொற்று அதிகரித்திருப்பதால் சின்னமுத்து ஏற்படலாம்.
சின்னமுத்து நோயாளர்கள் தொடர்பில் எண்ணிக்கை குறைவானதாக இருந்தாலும் இது குறித்து நாம் கவனம் செலுத்துவது அவசியம்.
இதனால்தான் சுகாதார அமைச்சு இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |