இலங்கை வீரர் சோனல் தினுஷவை சச்சினுடன் ஒப்பிட்ட BCCI துணைத் தலைவர்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை துடுப்பாட்ட வீரர் சோனல் தினுஷவை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பாராட்டியுள்ளார்.
சமூக வலைத்தளப் பதிவில் சுக்லா, “இலங்கையின் இந்த சோனல் அற்புதமான வீரர். டெண்டுல்கரைப் போலத் தெரிகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த டெஸ்ட் வீரராக உருவாக முடியும்” எனக் குறிப்பிட்டு, இலங்கை கிரிக்கெட்டையும் பதிவில் இணைத்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தினுஷ தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதன் பின்னணியிலேயே சுக்லாவின் இந்தப் பாராட்டு வெளியாகியுள்ளது.
100 ஓட்டங்கள்
நான்கு இன்னிங்ஸ்களில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை தினுஷ பெற்றுள்ளார்.

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்ஸில் 100 ஓட்டங்களையும், இரண்டாம் இனிங்ஸில் 84 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.
மேலும், இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 103 ஓட்டங்களை பெற்றுள்ள நிலையில் இரண்டாவது இன்னிங்ஸான இன்றைய இறுதி நாளில் மற்றொரு அரைச்சதம் கடந்து தற்போதுவரை 98 ஓட்டங்களை ஆட்டமிக்காது பெற்றுள்ளார்.
This Sonal of Srilanka is an amazing player. Looking like Tendulkar. Can be a wonderful test player in international cricket. @OfficialSLC
— Rajeev Shukla (@ShuklaRajiv) August 27, 2026
இலங்கை அணி தோல்வியைத் தவிர்க்கப் போராடிய நிலையில், தினுஷ கடைநிலை துடுப்பாட்ட வீரர்களுடன் இணைந்து நீண்ட நேரம் துடுப்படுத்தாடி வருகிறார்.
இந்தத் தொடரில் தினுஷவின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டமும், இந்தியாவின் சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்ட விதமும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
25 வயதான சோனல் தினுஷவின் இந்த ஆட்டம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.