ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் சாதனையை முறியடித்தது தென்னாபிரிக்கா
ஒரு நாள் போட்டிகளில் 400 ஓட்டங்கள் அதிக முறை எடுத்த இந்திய அணியின் சாதனையை தென்னாபிரிக்க அணி முறியடித்தது.
இந்திய அணி இதுவரை ஒரு நாள் போட்டிகளில் ஆறுமுறை 400 ஓட்டங்களுக்கு மேல் கடந்து சாதனை படைத்துள்ளது. அந்த சாதனையையே தென்னாபிரிக்க அணி நேற்று அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நடந்த போட்டியில் முறியடித்துள்ளது.
416 ஓட்டங்கள் குவிப்பு
அவுஸ்ரேலியாவின் செஞ்சூரியனில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 05 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 416 ஓட்டங்களை குவித்தது.
அவ்வணி சார்பாக ஹென்றிச் கிளாசன் 83 பந்துகளில் 13 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 174 ஓட்டங்களை விளாசினார்.அவருடன் இணைந்து டேவிட் மில்லர் 45 பந்துகளில் 05 சிக்ஸர் 06 பவுண்டரிகளுடன் 82 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 252 ஓட்டங்களை மட்டுமே பெற்று 164 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
ஏழாவது முறையாக
தென்னாபிரிக்க அணி ஒருநாள் போட்டியில் ஏழாவது முறையாக 400 ற்கும் மேல் ஓட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாள் போட்டிகளில் 400 ற்கும் மேற்பட்ட ஓட்டங்கள் எடுத்த அணிகள் வருமாறு, சிம்பாப்வே,நியூஸிலாந்து,ஆகிய அணிகள் ஒருமுறையும்,இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் இரண்டுமுறையும்,இங்கிலாந்து அணி ஐந்து முறையும்,இந்திய அணி ஆறுமுறையும்,தென்னாபிரிக்க அணி ஏழுமுறையும் 400 ற்கும் மேல் ஓட்டங்களை குவித்துள்ளன.