தென் சீனக் கடற்பிராந்தியத்தில் சீனாவால் புதிய சர்ச்சை
தென்சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதிக்குள் மீன்பிடிப் படகுகள் நுழைவதைத் தடுக்க, மிதக்கும் தடையை சீனா நிறுவி வருவதாக பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.
தென் சீனக் கடற்பரப்பின் 90 வீதத்திற்கும் அதிகமான பகுதியை சீனா உரிமை கோரிவருவதுடன், ஸ்கார்பரோ ஷோல் என்ற பகுதியை கடந்த 2012 ஆம் ஆண்டு கைப்பற்றியிருந்தது.
சீனாவின் மிதக்கும் தடுப்பு
இந்த நிலையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டிருந்த போது, சீனாவினால் நிறுவப்பட்ட மிதக்கும் தடுப்புக்களை அடையாளம் கண்டுள்ளதாக பிலிப்பைன்ஸ்சின் கடலோர பாதுகாப்பு படை கூறியுள்ளது.
கடற்றொழிலாளர்களுக்கு தடையை ஏற்படுத்தும் வகையில் ஸ்கார்பரோ ஷோல் பகுதியில் ஆயிரம் அடி நீளத்தில் இந்த தடையை சீனா நிறுவியுள்ளதாக பிலிப்பைன்ஸ்சின் கடலோர பாதுகாப்பு படை கூறியுள்ளது.
இந்த தடையானது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கின்றது எனவும் பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படையின் கட்டளை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
உரிமை கோரும் விடயத்தில் சர்ச்சை
வளமான மீன்பிடித் தளமான தென் சீனக் கடற்பிராந்தியம், பரந்த எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகள் உள்ள பகுதியாகவும் நம்பப்படுகின்றது.
உலகிலுள்ள கடற்றொழில் கப்பல்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவை தென் சீனக் கடற்பரப்பிலேயே இயங்கிவரும் நிலையில், குறித்த கடற்பரப்பிற்கு சீனா முழுமையாக உரிமை கோரும் விடயத்தில் சர்ச்சை நீடிக்கின்றது.
சீனாவின் இந்த உரிமை கோரலானது, பிலிப்பைன்ஸ் மாத்திரமல்லாமல், வியட்நாம், தாய்வான், மலேசியா மற்றும் புருனை ஆகிய நாடுகளையும் கோபப்படுத்தியுள்ளது.