கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட ஸ்பெயின் நாட்டு பொறியியலாளர்...!
பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வேளாண் பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (24-07-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதன்மைப் பயணப்பெட்டி
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேகநபர் கடந்த ஜூலை 22 ஆம் திகதி அன்று சியெரா லியோனிலிருந்து புறப்பட்டு அடிஸ் அபாபா மற்றும் தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் (QR654) வானூர்தியில் இலங்கையை வந்தடைந்தார்.
அவர் வந்தபோது அவரது கைப்பை சோதனையிடப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும் அவரது முதன்மைப் பயணப்பெட்டி (Checked Luggage) அதே வானூர்தியில் வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் நேற்று மாலை 6:30 மணியளவில் தாமதமாக வந்த தனது பயணப்பெட்டியைப் பெற அவர் விமான நிலையத்திற்கு வந்தபோது சுங்க அதிகாரிகள் பயணப்பெட்டியை எக்ஸ்-ரே (X-Ray) பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
பயணப்பெட்டி
இதன்போது பயணப்பெட்டிக்குள் இருந்த 2 கோப்பு வைத்திருப்புகளில் (File Holders) மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கொக்கெய்ன் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவை சுமார் 109.9 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள , 2,198 கிராம் (2.198 கிலோகிராம்) கொக்கெய்ன் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தனிப்பட்ட முறையில் பயணி இல்லாமல் தாமதமாக வந்த பெட்டியாக இருந்த போதிலும் சுங்க அதிகாரிகளினால் இந்த துல்லியமான கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பறிமுதல் செய்யப்பட்ட கொக்கெய்னுடன் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |