ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு: வெளியாகியுள்ள அறிவிப்பு
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
அண்மையில், அமெரிக்காவின் (USA) பென்சில்வேனியாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donal Trump) தாக்கப்பட்டிருந்தார்.
தனிப்பட்ட பாதுகாப்பு
இதனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினதும் முன்னாள் ஜனாதிபதிகளினதும் பிரத்தியேக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக குழுவொன்றை நியமிக்கவும் அத்தகைய சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பதற்கும் பிரதிப் காவல்துறை மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கும் பரிந்துரைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
தேர்தலுக்கான வேட்புமனுக்கள்
அதற்கமைய தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் அந்தந்த வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் தனிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி முதல் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, காவல்துறை மா அதிபர், தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் (தேர்தல்கள்) ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |