இமாலய பிரகடனத்திற்கு நிதியுதவி : சுவிஸ் அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டது
இலங்கையில் தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட “இமாலய பிரகடனத்திற்கு” தாம் நிதியுதவி செய்ததாக சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்து சோஷலிஸ கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மொலினா ஃபேபியன் எழுப்பிய கேள்விகளுக்கு கடந்த புதன்கிழமை (21) பதிலளிக்கும் போதே அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு இதை தெரிவித்துள்ளது.
“இமாலய பிரகடனத்திற்கு” சுவிஸ் அரசு எந்தளவிற்கு ஆதரவு வழங்கியது என அவர் நாடாளுமன்றில் எழுத்துபூர்வமான கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.
சுவிஸ் வெளிவிவகார அமைச்சு
அதற்கு பதிலளித்த அரசு, “சுவிஸ் வெளிவிவகார அமைச்சு “போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு” புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தளம் ஒன்றை நிறுவ நிதியுதவி அளித்தது. அதையடுத்தே அந்த “இமாலய பிரகடனம்” வெளியானது. எனினும், அந்த கலந்துரையாடல்களுக்கு பங்குதாரர் அமைப்பே பொறுப்பாக இருந்தது” என விளக்கமளித்துள்ளது.
இந்த கலந்துரையாடலில் ஏன் இலங்கையிலுள்ள எந்தவொரு தமிழரும் உள்வாங்கப்படவில்லை என அவர் எழுப்பிய கேள்விக்கும் மேற்கூறிய பதிலே அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 1983ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரங்கள் மற்றும் போர் தொடங்கியதை அடுத்து, 40 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் சுவிஸ் நாட்டிற்கு அகதிகளாக வந்தனர். அன்றிலிருந்து அவர்கள் புலம்பெயர்ந்த அந்த தமிழ் மக்கள் சுவிட்ஸர்லாந்து மக்களுடன் ஒருங்கிணைந்துள்ளனர் எனவும், ஃபேபியன் தனது கேள்விகளுக்கான முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமின்றி, 40 ஆண்டுகளுக்கு பின்னரும் இலங்கையின் அரசியல் சூழல் தொடர்ந்து உறுதியற்ற நிலையில் காணப்படுவதாகவும், இலங்கையின் உள்நாட்டிலும், புலம்பெயர்ந்த தமிழர்களும், அங்கு இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை, அரசியல் தீர்வு, சுயநிர்ணய உரிமை, தமிழர் பகுதியிலிருந்து இராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் அவர் தனது முன்னுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தனது செப்டெம்பர் 2023, அறிக்கையில், நீதிபரிபாலனம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை முன்னெடுப்பதற்கான விருப்பம் இல்லை எனக் கூறியிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இப்படியான முன்னுரையை அடுத்து அவர் ஏழு கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி அதற்கான பதில்களை கோரியிருந்தார்.
நல்லிணக்கம் ஏற்படுவதை ஆரம்பிப்பதற்கு போர் குற்றங்கள் விசாரிக்கப்படுவது, அரசியல் தீர்வொன்றை கண்பது ஆகியவை தொடர்பில் சுவிட்ஸர்லாந்து எப்படியான ஆதரவை அளிக்கிறது என்பதை முதலாவது கேள்வியாகவும் பின்னர் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்த தமிழர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு சுவிட்ஸர்லாந்து எப்படியான ஆதரவை வழங்குகிறது என்ற மற்றுமொரு கேள்வியையும் எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு, “இலங்கையில் சுவிட்ஸர்லாந்து சமாதானத்திற்கான செயற்றிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், சிறையில் சித்திரவதை செய்யப்பட்டவர்களுக்கான சட்ட உதவிகளை அளிக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம்.
மேலும் சட்டத்தின் ஆட்சி, கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நிறுவனங்களுடன் செயல்படுகிறோம். ஐ நா மனித உரிமைகள் பேரவை, இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சுவிட்ஸர்லாந்து ஆதரித்துள்ளது.
இருநாட்டு உறவுகள்
இலங்கையில் இடம்பெற்றவை தொடர்பிலான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துடன் இலங்கை அரசு இணைந்து செயற்பட வேண்டும் என தொடர்ச்சியாக சுவிட்ஸர்லாந்து அரசு கோருகிறது. பயங்கரவாத தடைச் சட்டம் சட்டவிரோதமான வகையில் பயன்படுத்தப்படுவதை கண்டிப்பதோடு, இலங்கையுடனான இருநாட்டு உறவுகளிலும் இது எடுத்துரைக்கப்படுகிறது” எனக் கூறியுள்ளது.
நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இல்லை என கூறி மனித உரிமைகள் அமைப்புகளாலும் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலும் விமர்சிக்கப்படும் இலங்கை அரசாங்கத்தின் உத்தேச உண்மை ஆணைக்குழுவை சுவிட்ஸர்லாந்து எவ்வாறு ஆதரிக்கிறது? எனவும் சுவிட்ஸர்லாந்து சோஷசில கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்துள்ள அரசு, “உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு ஒன்றை அமைக்கும் இலங்கை அரசின் எதிர்பார்ப்பை அரசு கவனத்தில் எடுத்துள்ளது. இப்போதைய சூழலில் அதற்கு ஆதரவளிப்பது குறித்து தாங்கள் பரிசீலிக்கவில்லை. கடந்த டிசம்பர் 2023இல், முத்தரப்பு முன்னெடுப்பாக ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்க தூதரகங்களுடன் சுவிட்ஸர்லாந்து தூதரகமும் கூட்டாக அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் நம்பிக்கையை கட்டியெழுப்பவும், நல்லிணக்கத்தை ஊக்கப்படுத்தவும் முன்னெடுக்கப்படக் கூடிய பிரேரணைகள் அடங்கிய பட்டியல் ஒன்றை அளித்துள்ளோம்,” எனக் குறிப்பிட்டுள்ளது.
இமாலய பிரகடனம்
இலங்கையில் அண்மைக் காலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் சித்திரவதைக்கு உள்ளாவது, உயிரிழப்பது ஆகியவை குறித்த செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களின் பாதுகாப்பை எவ்வாறு சுவிட்ஸர்லாந்து உறுதிப்படுத்தப் போகிறது எனவும் அவர் அரசிடம் வினவியுள்ளார்.
குடியேற்றம் மற்றும் குடியகல்வு ஆகியவை தொடர்பான வழமையான நடைமுறைகள் தொடர்ச்சியாக இந்த விடயத்தின் பின்பற்றப்படுகின்றன எனவும், ஒவ்வொரு விண்ணப்பமும் தனிப்பட்ட முறையில் கையாளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுறது எனவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு இதற்கு பதிலளித்துள்ளதுடன் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் இறுதிவரை 61 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் எனவும், 21 பேர் சுயமாக நாடு திரும்பினர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மிகவும் சர்ச்சைக்குரிய இந்த இமாலய பிரகடனம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. வடக்கு கிழக்கில் வாழும் பாதிக்கப்பட்ட தமிழர்கள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள், போரினால் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரால் இது நிராகரிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |