வீதி விபத்துக்கள் மூலம் கடந்த 10 மாதங்களில் 1,500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!
கடந்த 10 மாதங்களில் 1,638 வீதி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விபத்துக்களினால் இது வரை 1,733 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் காவல்துறை ஊடக பேச்சாளர் மற்றும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இன்று(07) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, விபத்துக்களில் அதிகமாக உயிரிழந்தவர்கள் பாதசாரிகள் எனவும் அந்த எண்ணிக்கை 540 எனவும் தெரிவித்துள்ளார்.
மக்களின் பாதுகாப்பு
மேலும் இது தொடர்பில் அவர் கூறுகையில், “வீதி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், 1,733 பேரில் 540 பேர் பாதசாரிகள் மற்றும் 543 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளனர்.
எனவே, இவ்வாறு சாலையில் பயணிக்கும் இந்த அப்பாவி மக்கள் மீது கவனம் செலுத்துமாறு சாரதிகளை கேட்டுக்கொள்கிறோம்.
பாதசாரிகளின் அலட்சியத்தால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.எனவே, பாதசாரிகளாகிய நீங்கள் சாலையில் செல்லும்போதும் கவனமாக இருக்கவும்” என கூறியுள்ளார்.