விழுந்து நொருங்கிய உலங்கு வானூர்தி! விபத்து தொடர்பில் ஆராய விசேட குழு
புதிய இணைப்பு
விபத்துக்குள்ளான விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 வகையைச் சேர்ந்த உலங்கு வானூர்தி தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, 09 பேர் அடங்கிய விசேட விசாரணைக் குழுவொன்று விமானப்படைத் தளபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தியை அவசர தரையிறக்கம் செய்ய முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
விமானப்படையின் 7வது பிரிவுக்கு சொந்தமான இந்த உலங்கு வானூர்தி இன்று காலை 6:44 மணியளவில் ஹிங்குரக்கொட விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டது.
காலை 7:08 மணியளவில் மாதுரு ஓயா பகுதியில் உலங்கு வானூர் விபத்துக்குள்ளானதுடன், விமானிகள் இருவர் உட்பட 6 விமானப்படை வீரர்கள் என மொத்தம் 12 பேர் அதில் பயணித்துள்ளனர்.
இதன்போது, உலங்கு வானூர்தியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்ததாக விமானப்படை தெரிவித்தது.
நான்காம் இணைப்பு
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இதில் விமானப்படை வீரர்கள் இருவரும், இராணுவ விசேட படையைச் சேர்ந்த நான்கு பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த சம்பவத்தில் காயமடைந்த 6 படை வீரர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மூன்றாம் இணைப்பு
இன்று காலை இடம்பெற்ற இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் உலங்கு வானூர்தியில் பயணித்திருந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளான பெல் 212 உலங்கு வானூர்தியில் இருந்த விமான கட்டுப்பாட்டாளர்கள் இருவர் உட்பட 12 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கை விமானப்படைக்கு (SLAF) சொந்தமான பெல் 212 உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று (09) காலை இலங்கை விமானப்படையின் பயிற்சி நிறைவு விழாவில் நடைபெற்ற அணிவகுப்பின் போது இடம்பெற்றுள்ளது.
ஹிங்குரக்கொட முகாமில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட குறித்த உலங்கு வானூர்தி மாதுரு ஓயாவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர் விங் கொமாண்டர் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.
விமானிகள் இருவரும் பாதுகாப்பாக மீட்பு
விபத்து நடந்த நேரத்தில் இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் உலங்கு வானூர்தியில் இருந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், உலங்கு வானூர்தியின் விமானிகள் இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உலங்கு வானூர்தியில் இருந்த மற்ற நபர்கள் குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
