அமெரிக்க சபாநாயகர் தாய்வானை விட்டு வெளியேறியதும் தீவிர இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் சீனா!
அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான நான்சி பெலோசி 25 ஆண்டுகளுக்கு பின்னர் தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டு, தாய்வானின் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்ததன் பின்னர் நேற்று அங்கிருந்து வெளியேறியிருந்தார்.
நான்சி பெலோசியின் நீண்ட ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகவே அவர் தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தினை சீனா கடுமையாக விமர்சித்ததுடன், தாய்வானை சுற்றியுள்ள பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ பயிற்சியில் சீனா
இவ்வாறான நிலையில், சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானை விட்டு வெளியேறியதை அடுத்து, சீனா இராணுவ பயிற்சிகளுக்குத் தயாராகி வருகின்றது எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானில் உரையாற்றுகையில்,
“தாய்வானின் ஜனநாயகத்திற்கு ஆதரவு தருவதில் தமது நாடு உறுதியான ஈடுபாட்டுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா-தாய்வான் நீண்ட கால கொள்கையில் முரண்பாடு ஏற்படாது
தாய்வான் மீது அமெரிக்கா நீண்ட காலம் கொண்டுள்ள கொள்கையில் தமது பயணம், எந்தவிதத்திலும் முரண்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வளர்ந்து வரும் ஜனநாயகம் கொண்ட தாய்வான், சவால்களை சந்தித்த போதிலும், அமைதி மற்றும் வளமிக்க எதிர்காலம் ஆகியவற்றை நம்பிக்கை, தைரியம் கொண்டு கட்டியெழுப்பியுள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.
