ஆசிய கிண்ணதொடர் - சிறிலங்கா கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் சிறிலங்கா கிரிக்கெட் அணி, முக்கிய வீரர்கள் இருவரின் காயம் காரணமாக அவதிப்பட்டுவரும் வேளை தற்போது மேலும் இரண்டு வீரர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளயதால் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனினும், குறித்த இரு வீரர்களும் தொடருக்கான சரியான நேரத்தில் குணமடைவார்கள் என்று சிறிலங்கா கிரிக்கெட் (எஸ்எல்சி) அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வீரர்களுக்கு காயம்
இரண்டு கிரிக்கெட் வீரர்களும் நேற்று (ஓக. 24) தொடங்கிய பயிற்சிகளில் பங்கேற்கவில்லை.
சிறிலங்கா கிரிக்கெட் அணியின் வனிந்து ஹசரங்கா மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் காயம் காரணமாக ஆசிய கிண்ண போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) ஏற்பட்ட காயம் காரணமாக துஷ்மந்த சமீர ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை என தெரியவருகிறது.
இறுதிபோட்டிகளில் விளையாடுவார்
இதற்கிடையில், வனிந்து ஹசரங்க தனது உடற்தகுதி முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில் ஆசிய கிண்ண போட்டியின் முதல் சில ஆட்டங்களைத் தவறவிடக்கூடும், எனினும் தொடரின் இறுதிப்போட்டிகளில் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் பாகிஸ்தான் - நேபாளம் இடையே ஓகஸ்ட் 30-ம் திகதி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
ஓகஸ்ட் 31 ஆம் திகதி கண்டி பல்லேகலவில் பங்களாதேஷுக்கு எதிரான முதல் போட்டியுடன் இலங்கை தனது ஆசிய கிண்ண ஆட்டத்தை தொடங்கவுள்ளது.