இலங்கை, அவுஸ்ரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்த காலம் நீடிப்பு
இலங்கை மற்றும் அவுஸ்ரேலியா வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்த காலத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பிரனாந்து முன்வைத்த யோசனைக்கு அமைய அமைச்சரவை இந்த அங்கிகாரத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியா இலங்கையில் ஒரு முக்கியமான வெளிநாட்டு நேரடி முதலீட்டு பங்காளியாகவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஐந்தாவது பெரிய ஆதாரமாகவும் உள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் 2017 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியா இடையே வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மேற்படி வர்த்தக உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பைத் தொடரும் வகையில் குறித்த ஒப்பந்த காலத்தை எதிர்வரும் 10-10-2023 முதல் ஐந்து வருடங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.