அமெரிக்காவின் உத்தரவில் ஷாங்காய் உச்சி மாநாட்டை புறக்கணித்த இலங்கை : முஜுபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு
அமெரிக்கா (USA) வழங்கிய உத்தரவின் பேரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டை இலங்கை அரசாங்கம் பகிஷ்கரித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் (Mohamed Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (05) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ”பீஜிங்கில் இருக்கும் தூதுவரையாவது குறித்த மாநாட்டுக்கு அனுப்பியிருக்கலாம். ஆனால் அதை கூட செய்ய முடியாமல் அமெரிக்காவின் அடிமையாகியுள்ளது அரசாங்கம்.
அரசாங்கத்தின் முட்டாள் தனமான தீர்மானம்
இந்த உச்சி மாநாடு 1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். இந்த ஆண்டுக்கான மாநாடு ஓகஸ்ட் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் எமக்கு கிடைக்கவிருந்த நன்மைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் அரசாங்கத்தின் முட்டாள் தனமான தீர்மானங்களால் இழக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கம், ட்ரம்பின் ஆளுகைக்கு அடிமைப்பட்டுள்ளது. ஏனென்றால் இவர்கள் அமெரிக்க துதுவர் ஜுலி சங் (Julie J. Chung) உடனான உறவில் அது தெளிவாக தென்படுகிறது.
அமெரிக்காவின் வரி விதிப்பு
அமெரிக்காவின் வரி அதிகரிப்பால் இந்தியா கலந்து கொண்டது என்று எடுத்துக் கொண்டாலும், இலங்கையுடன் ஒப்பிடும் போது குறைவான வரி விதிக்கப்பட்ட பாகிஸ்தான் கலந்து கொண்டிருந்தது.
வேலைப்பளுவால் ஜனாதிபதி கலந்து கொள்ளவில்லை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால் உள்ளூராட்சி சபை தேர்தல் காலத்தில் வியட்நாம் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனியார் ஜெட்விமானத்தில் வந்தவருக்கு ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டுக்கு போக முடியாதளவு வேலைப்பளு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்த அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை தொடர்பில் எமக்கு தெளிவின்மை காணப்படுகிறது. இந்த மாநாடு உலக சமாதானம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் நடைபெற்றதாகும்.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
