வீதியை விட்டு விலகி 30 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து - விபத்தில் சிக்கிய பயணிகள்..!
இரத்தினபுரி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பலாபத்தல பகுதியிலிருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த குறித்த பேருந்து இன்று (10) இந்துருவ பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து
இந்நிலையில், பிற்பகல் 01.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்த அனைவரும் கிளிமலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 45 பேர் பயணித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் இந்த பேருந்து குருவிட்ட- எரட்ன சிறிபா பாதையில் சேவையில் ஈடுபடும் பேருந்து எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
விசாரணை
சிவனொளிபாதமலை யாத்திரிகர்களின் வசதிக்காக இந்த நாட்களில் விசேட சேவையாக குறித்த பேருந்து ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
