சீனக் கப்பல் விவகாரம் - தத்தமது பலங்களை நிரூபிக்க முயலும் உள்ளக, வெளியகச் சக்திகள்!
சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு, சீனக் கப்பல் வருவதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியிருக்கின்றது.
அதன் பிரகாரம், நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக தீர்மானம் எடுக்கும்போது அரசாங்கமும், பாதுகாப்புத் தரப்பினரும் இணைந்து முடிவெடுப்பார்கள் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில், வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு சீனக் கப்பல் வரும் விடயத்தை உள்ளகச் சக்திகளும், வெளியகச் சக்திகளும் சுயநல அரசியலுக்கும், தத்தமது பலங்களை நிரூபிப்பதற்கும் பயன்படுத்த முயல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிச்சக்திகள் தலையிட முடியாது
ஒரு நாட்டின் வெளிவிவகாரம் சம்பந்தமாக அந்த நாட்டு அரசாங்கமே தீர்மானம் எடுக்கும். அதில் வெளிச்சக்திகள் தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த விடயத்தை உள்ளக சக்திகளும், வெளியக சக்திகளும் சுயநல அரசியலுக்கும், தத்தமது பலங்களை நிரூபிப்பதற்கும் பயன்படுத்த முயல்கின்றார்கள். ஆனால் எந்த நாட்டையும் பகைக்கவேண்டிய, மோதவேண்டிய நிலைமை சிறிலங்காவிற்கு கிடையாது.
இலங்கைக்கு விழுந்த வரலாறு காணாத பொருளாதார அடி
வரலாறு காணாத பொருளாதார அடியால் விழுந்து கிடக்கின்றது இலங்கை. அதிலிருந்து மெல்ல மெல்ல இலங்கை இப்போதுதான் எழுகின்றது. இந்தநிலையில், வெளிநாடுகளின் ஒத்துழைப்பையே கோரி நிற்கின்றோம்.
பகைமைகளை மறந்து ஒவ்வொரு நாடுகளும் இலங்கைக்கு உதவ வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
சீனக் கப்பல் விவகாரம் தொடர்பில் உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வெளியாகும் முரண்பாடான செய்திகள் எமக்கு மிகவும் மனவருத்தத்தைத் தருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.