நாமலின் திருமணத்திற்கான மின் கட்டண விசாரணை! உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூலை 01ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இலங்கை உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
நாமலின் திருமண நிகழ்வுக்கான பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான ரூபாய் 2 மில்லியனை கடந்த நிலுவை மின்சார கட்டணத்தை காலத்திற்கு உட்பட வசூலிக்காதது பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூலை 01ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நேற்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீதி பத்மன் சூரசேன, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய மூவர் அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
அடிப்படை உரிமைகள் மனு
இந்த அடிப்படை உரிமைகள் மனுவை சட்டத்தரணி விஜித குமார தாக்கல் செய்திருந்தார்.

மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி திஷ்ய வீரகொட, இலங்கை மின்சார சபை தற்போது ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டிருப்பதால், புதிய நிறுவனத்தை பதிலளிப்பாளராக சேர்க்க மனுவை திருத்த அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரினார்.
மேலும், புதிய மின்சாரச் சட்டத்தின் இடைக்கால விதிகளை ஆய்வு செய்ய கால அவகாசமும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த பதிலளிப்பாளர் தரப்பு சட்டத்தரணி பாலித குமாரசிங்க, இலங்கை மின்சார சபையின் சொத்துகளும் பொறுப்புகளும் தற்போது ஐந்து தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
திருமண நிகழ்வுக்கான மின்சார கட்டணம்
மேலும், சம்பந்தப்பட்ட திருமண நிகழ்வுக்கான மின்சார கட்டணம் ஏற்கனவே முழுமையாக செலுத்தப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்பும் அந்த கட்டணம் செலுத்தப்பட்டதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது என்றும் கூறப்பட்டது.
ஆனால், இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு, பொதுமக்கள் சிறிய தொகை மின்சார கட்டணத்தை தாமதித்தாலும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்படும் நிலையில், இவ்வளவு பெரிய தொகையை காலத்திற்கு உட்பட வசூலிக்காதது மிகவும் கவலைக்குரியதாகும் என வலியுறுத்தியது.
இந்த விதமான செயல்பாடு மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிப்பைப் பெறுவதே வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |