சீனாவிற்கு விற்கப்படவுள்ள சிறிலங்காவின் பல ஏக்கர் காணி- வெளிச்சத்திற்கு வந்த தகவல்!
துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான பல ஏக்கர் காணி சீனாவிற்கு விற்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான கொழும்பில் உள்ள 13 ஏக்கர் காணியை 3 ஆயிரம் கோடி ரூபாவுக்கு சீனாவிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க (Ashoka Abeysinghe) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த காணி கொழும்பு துறைமுக நகருக்கு அருகில் அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
துறைமுகம் மற்றும் கப்பற்துறை அமைச்சு உள்ளிட்ட சில அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கொழும்பு துறைமுக நகருக்கு அருகில் இருக்கும் காணி மிகவும் பெறுமதியான காணி. டொலர் தேவை எனக் கூறி, நாட்டின் வளங்கள் இப்படி விற்பனை செய்யப்படுகின்றன. இது பாரதூரமான தவறு.
துறைமுக தொழிற்சங்கங்கள் இந்த தீர்மானத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொழும்பு துறைமுகத்தின் மேற்கு தடாகத்தை நிர்மாணிக்கும் பணிகள் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே துறைமுக அதிகார சபை சூரியவெவ விளையாட்டு மைதானத்திற்கு 316 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என வரவு செலவு சாரம்சங்களில் கூறப்பட்டுள்ளது. எனினும் துறைமுக அதிகார சபை, சூரியவெவ மைதானத்திற்கு இரண்டு பில்லியன் ரூபாவுக்கும் செலுத்த வேண்டியுள்ளதாக கோப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது புதுமையான நாடு ஒன்றில் நடக்குமே தவிர வேறு சாதாரண நாடுகளில் நடக்காது எனவும் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.