தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரம்- அதிருப்தியில் பேராயர்; இராஜாங்க அமைச்சர் கடும் விமர்சனம்!
கொழும்பு பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் வைக்கப்பட்ட கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணைகள் குறித்து பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
அத்துடன் ஈஸ்டர் தாக்குதலை அரச தலைவர் தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்தினார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பொரளையில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பாக பேராயர் நடந்துகொள்ளும் விதம் தொடர்பாகவே ராஜாங்க இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
பேராயர், காவல்துறை கடமையாற்ற வேண்டிய விதம் குறித்து கற்பித்து வருகிறார். அரசாங்கத்திற்கு ஆட்சி செய்யும் விதம் பற்றி கற்பிக்கின்றார். காவல்துறை காலையில் விசாரணைகளை ஆரம்பித்த பின்னர், மாலையில் விசாரணை சரியில்லை என குற்றம் சுமத்துகிறார்.
அத்துடன் ஈஸ்டர் தாக்குதலை தற்போதைய அரசாங்கமே நடத்தியது போன்ற தோரணையில் குற்றம் சுமத்தி வருகிறார்.
பேராயர் தொடர்பில் இவற்றை கூற தான் அச்சப்படவில்லை எனவும் விமலவீர திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.