அரச தலைவரின் செயலகத்தை முற்றுகையிட்டு தடைகளைத் தகர்த்து பிக்குகள் போராட்டம்!
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனம் (IUBF) இன்று கோட்டையிலுள்ள அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தது.
விகாரமஹாதேவி பூங்காவில் இருந்து ஆரம்பித்த எதிர்ப்பு பேரணி காலி முகத்திடலை நோக்கி சென்றது. அதன் போது கொழும்பில் உள்ள உலக வர்த்தக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வீதிகள் காவல்துறையினரால் தடுப்புகள் போட்டு அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தடைகளை அகற்றி முன்னோக்கிச் சென்றனர்.
அத்துடன் இலங்கை மத்திய வங்கிக்கு முன்பாக இருந்த காவல்துறை தடுப்புகளை அகற்றிய அவர்கள், அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் போராட்டக்காரர்கள் அரச தலைவர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக நடந்து வரும் பொது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலி முகத்திடலை நோக்கிச் சென்றுள்ளனர்.
காலி முகத்திடலை ஆக்கிரமிப்பு பொதுப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, அதனைச் சூழவுள்ள வீதிகளை காவல்துறையினர் மறித்திருந்த நிலையில், அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
