நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - மூடப்பட்டது தொடருந்து நிலையம்!
இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ராகம தொடருந்து நிலையம் தொற்று அச்சத்தால் இன்று மூடப்பட்டுள்ளது.
தொடருந்து நிலையத்தின் பற்றுச்சீட்டு விநியோகிக்கும் இடத்தில் பணியாற்றும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து குறித்த தொடருந்து நிலையத்தின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ராகம தொடருந்து நிலையத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று காலை பற்றுச்சீட்டு விநியோகிக்கும் இடம் மூடப்பட்டதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்பகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பற்றுச்சீட்டு வழங்குவது நிறுத்தம்
அத்துடன் பல ஊழியர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில், பற்றுச்சீட்டு வழங்குவது நிறுத்தப்பட்டு, அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
எனினும் கடமைகளை ஈடுசெய்வதற்காக மாற்று உத்தியோகத்தர்கள் இன்று அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாணவர்களே அதிகம்
அத்துடன், நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 25 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் பாடசாலைகள் மூன்று வாரங்களின் பின்னர் திறக்கப்பட்டமையினால், டெங்கு நோய் பரவுவதனை தடுப்பதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு பெற்றோர் மற்றும் பொது மக்களை இலங்கையில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
