அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயல் - நெருக்கடியை எதிர்கொள்ளப்போகும் இலங்கை!
இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் நாடு சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளது.
எதிர்வரும் மூன்று வாரங்களில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுமென்ற விடயத்தை சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஒட்சிசன் மற்றும் வைத்தியசலைகளின் கட்டில்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமெனவும் எச்சரித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
எதிர்வரும் மூன்று வாரங்களில் இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என இலங்கை வைத்திய சபை ஜனாதிபதியிடம் எச்சரித்துள்ளது.
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அந்த சபை அறிவித்துள்ளது. ஒட்சிசனின் தேவையும், வைத்தியசாலையில் கட்டில்களின் தேவையும் குறிப்பாக அவசர சிகிச்சைப் பிரிவு கட்டில்களுக்கானத் தேவையும் அதிகரித்துள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய வைரஸ் தொற்றின் பரவல் அதிகரிக்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். அதனைவிட புதிய வைரஸை தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியாது என்பதை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அவசர சிகிச்சைப் பிரிவுகளில் 40 கட்டில்கள் மாத்திரமே காணப்படுகின்றன. அவை அனைத்திலும் இன்று நோயாளர்கள் நிரம்பியுள்ளனர்.
இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வைத்தியசாலைகளையாவது கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க ஒதுக்கீடு செய்ய வேண்டும். எனினும் இதுவரை பல மாவட்டங்களில் வைத்தியசாலைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு தயார் என அரசாங்கம் தெரிவிக்கின்றது எனினும் தடுப்பூசியைப் எங்கிருந்து பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவான தகவலை வழங்கவில்லை.
இலங்கை அரசாங்கத்தின் கணக்கின்படி 260 இலட்சம் தடுப்பூசிகள் அவசியம், எனினும் இதுவரை 12 இலட்சம் தடுப்பூசிகள் மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளன.
ஆகவே தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான அரசாங்கத்தின் திட்டம் என்னவென்பது குறித்து இதுவரை தெளிவுபடுத்தவில்லை. அரசாங்கம் இன்று பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியுள்ளது.
பொருளாதார நெருக்கடி, கடன் சிக்கல், ஊழல் மோசடி என பல வழிகளில் அரசாங்கம் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. இதனை மூடி மறைக்க பலரை கைது செய்கிறது அரசாங்கம் என்றார்.