இலங்கையில் சுகாதாரக் கட்டமைப்பு வீழும் அபாயம்!! வைத்தியர் செனல் பெர்ணாண்டோ எச்சரிக்கை
இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், ஐயாயிரத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் வீடுகளிலேயே சிகிச்சைப் பெற்று வரும் நிலை காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனல் பெர்ணாண்டோ, எதிர்வரும் இரண்டு வாரங்கள் இலங்கைக்கு மிகவும் தீர்க்கமான காலகட்டமாக அமையும் என எச்சரித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
அரசாங்கம் மிகவும் தாமதித்தே பயணக்கட்டுப்பாட்டினை அறிவித்திருக்கின்றது. எனினும் இவ்வாறு இன்று முதல் அமுல்படுத்தப்படுகின்ற பயணக்கட்டுப்பாட்டின் ஊடாக பெறப்படுகின்ற பிரதிபலன் அடுத்த ஒருவாரம் இல்லது இரண்டு வாரத்தின் பின்னரே தெரியவரும்.
வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெறுகின்றவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை அண்மித்திருக்கின்றது. மருத்துவத்துறை மற்றும் வைத்தியசாலைகளில் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் வளங்களின் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்கின்றன. இந்த நிலைமை தொடர்ந்தும் ஏற்பட்டால் முழு சுகாதாரத்துறைக் கட்டமைப்பும் வீழ்ந்துவிடும் அபாயமும் உள்ளது.
சில நோயாளர்கள் வீடுகளில் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கான கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்று உறுதியாகிய ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் வீடுகளிலேயே தொடர்ந்தும் சிகிச்சைப் பெறுகின்றனர்.
இந்நிலையில் அதற்காக அரசாங்கத்திடமும் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவிடத்திலும் கொள்கையொன்றை வகுக்கக் கேட்டிருந்தோம். இன்றுவரை அதனை இருதரப்பினரும் செய்யவில்லை.
அதேபோல எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் தீர்க்கமான காலகட்டமாக இலங்கைக்கு அமைகின்றது. நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாகவும் அதிகரிக்கலாம்.
அரசாங்கம் நேயாளர் படுக்கைகளை தயார்செய்து வருகின்றது. அதனை வரவேற்கின்றோம்.
எனினும் தொற்றாளர்களுக்கு சிகிச்கையளிக்க போதுமான பணிக்குழு இல்லை என்பதையும் அரசாங்கம் கவனத்திற்கொள்ள வேண்டும் என்றார்.