கொரோனாவை கட்டுப்படுத்த அவசர முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்து தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் புதிய மூன்று முன்மொழிவுகளை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த முன்மொழிவுகளை அவசரமாக நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.
இலங்கையில் உள்ள சகல சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டமை தொடர்பான தரவுகளை வெளியிடுமாறு தொற்று நோயியல் பிரிவிற்கு அறிவுறுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.
தொற்றா நோய்கள் இருப்பவர்கள் உட்பட 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி வழங்குவதன் அவசியம் குறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தல் மற்றும் அதனை நிறைவேற்றுவதற்கு உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் அந்த சங்கம் பரிந்துரை செய்துள்ளது.
அத்துடன் தொலைபேசி அழைப்புக்களின் போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி மருந்தை ஏற்றுவதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சரை வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை இலங்கையில் சுகாதாரத்துறையில் உள்ளவர்கள் அதிகளவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிவருவதால், வைத்தியசாலைகளில் மனித வளத்திற்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை வரம்பை கடந்துள்ள நிலையில், நோயாளர்களுக்கான படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் நலிந்த ஹேரத் கூறியுள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றானது மிக மோசமடைந்து, உச்ச நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கும் நலிந்த ஹேரத், அதிகளவான உயிரிழப்புக்களும் பதிவாகிவருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.