ஏனைய நாடுகளை விட இலங்கையில் கொவிட் மரண வீதம் அதிகரிப்பு
கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சுகாதார அமைச்சு மீதான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகின்றது.
இந்தியாவைப் போன்று நாம் பெரிய நாடு அல்ல. இந்தியாவோடு ஒப்பிடுகையில் எமது நாட்டில் மரண எண்ணிக்கை அதிகமாகும்.
ஒரு நாட்டில் ஒரு மில்லியன் பேருக்கு எத்தனை கொரோனா தொற்று காரணமாக மரணம் அடைந்துள்ளனர் என பார்க்கும் போது எமது நாட்டில் ஒரு மில்லியன் பேருக்கு 664 பேர் மரணமடைந்துள்ளனர். அந்தத் தொகை இந்தியாவில் 334 ஆகவும், மாலைதீவில் 442ஆகவும், ஆப்கானிஸ்தானில் 182 ஆகவும், பங்களாதேஷில் 160 ஆகவும், பாகிஸ்தானில் 126 ஆகவும் காணப்படுகிறது.
அந்தவகையில் ஏனைய நாடுகளை விட, எமது நாட்டில் அதிகமானோர் கொரோனா வைரஸ் நோயினால் மரணமடைந்துள்ளனர்.
கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதிலும் அரசியல் தலையீடுகள் இருந்தமையே இதற்கு காரணமாகும். எமது நாட்டில் சுகாதாரத்துறை அரசியல் கண்ணாடி கொண்டே பார்க்கப்படுகிறது.
ஆளும் கட்சி பதவியில் உள்ள காலத்தில் எதிர்க்கட்சி அதுபற்றி விமர்சிப்பதும் எதிர்க்கட்சி பதவியில் உள்ள காலத்தில் ஆளும் கட்சி அதுபற்றி விமர்சிப்பதுமே இடம்பெறுகிறது.
அடுத்த வருடம் வரவு செலவு திட்டததில் மருந்து கொள்வனவுக்கு 65பில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அப்படியாயின் எவ்வாறு தட்டுப்பாடு இல்லாமல் வைத்தியசாலைகளுக்கு மருந்து வழங்க முடியும்” என்றார்.