போலியான செய்திகளை வெளியிடும் அதிபர் ஊடகப் பிரிவு: ரொஷான் ரணசிங்க குற்றச்சாட்டு
தம்மைப் பற்றி அதிபர் ஊடகப் பிரிவு போலியான செய்திகளை வெளியிடுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் காணப்படும் பணத்திற்கு பேராசை பிடித்த சிலர் தமது அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்வதற்கு முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறானவர்கள் அரசாங்கத்தில் உள்ளேயே இருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
போலியான செய்திகள்
கிரிக்கெட் நிறுவனத்தில் பணத்தை கொள்ளையிட்ட நபர்கள் அந்த பணத்தை பயன்படுத்தி தம்மை படுகொலை செய்ய கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைத்த கடிதங்கள் இலங்கை சட்டத்திற்கு முரணானது எனவும் நீதிமன்றத்தையும் பிழையாக வழி நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடகப்பிரிவு தம்மைப் பற்றி போலியான செய்திகளை பிரச்சாரம் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னணியில் யார் செயல்படுகின்றார் என்பது குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜூலை 9ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவுடன் எவரும் இருக்கவில்லை எனவும் தாம் மட்டுமே இருந்ததாகவும் அதிபர் பழையவற்றை மறக்காவிட்டால் தமது அமைச்சுப் பதவியை பறிக்க மாட்டார் எனவும் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.