இறந்துவிட்டார் என தெரிவித்து பிரேத அறைக்கு அனுப்பப்பட்டவர் உயிர்பிழைத்த அதிசயம்
நீர்கொழும்பு மாவட்ட மருத்துவமனையில் உள்ள பிரேத அறைக்குஉயிரிழந்துவிட்டார் என தெரிவித்து அனுப்பப்பட்ட ஒருவர் உயிருடன் திரும்பியுள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 40 வயதான மீனவர் ஒருவர் நீர்கொழும்பு மாவட்ட மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.
அவரது உடல் பின்னர் பிரேத அறைக்கு அனுப்பப்பட்டது. அவரது உடலை பிரேத அறையில் பார்வையிட அவரது உறவினர்கள் சென்றபோது அந்த நபர் உயிருடன் இருந்துள்ளார்.
பின்னர் அவர் மீண்டும் மருத்துவமனை விடுதிக்கு அனுப்பப்பட்டார், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சைகள் வழங்கியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சீனியின் அளவு குறைவாக இருப்பதால் அவர் கோமா நிலையில் இருப்பது பின்னர் தெரியவந்தது.
அவர் இறந்துவிட்டதாக அறிவித்து அவரை பிரேத அறைக்கு அனுப்பிய மருத்துவர் மீது மருத்துவமனை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.